இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை கொழும்பில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை இலங்கை அதிபரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், அவரது அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், இலங்கை அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய அண்டை நாடுகளாகவும், கடல்சார் கூட்டாளிகளாகவும் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் மட்டுமின்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் வளத்திற்காகவும் இணைந்து செயல்படுவது குறித்து இரு தரப்பும் மீண்டும் உறுதி செய்ததாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனிடையே, நேற்று இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா-இலங்கை உறவு நீண்டகால வரலாற்று பின்னணியைக் கொண்டது என்று தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டங்களில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், இரு நாடுகளின் உறவு பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், சர்வதேச அளவில் இந்தியாவின் கருத்துகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கிடைத்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.கடந்த 38 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.