ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணியில் மேத்யூ பிரீட்ஸ்கி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கோ யான்சென் 59 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். டெம்பா பவுமா 30 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியின் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 298 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 41.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், ரெஷா 44 ரன்களும் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக போராடினர். இரு அணிகளின் இன்னிங்ஸ்களிலும் முதல் 10 ஓவர்களைப் பார்க்கும்போது, நாங்கள் இரண்டு முறையும் நெருக்கடியான சூழலில் இருந்தோம். ஆனால் அந்த நிலையை சிறப்பாக சமாளித்தோம். பேட்டிங்கில் அந்த ஆடுகளத்தில் எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையில் நல்ல ஸ்கோரை பதிவு செய்தோம். பந்துவீச்சிலும் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு நெருக்கடியை எதிர்கொண்டோம். இருப்பினும் தொடர்ந்து போராடி, இறுதியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெற்றோம்” என்றார்.