தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களுக்கு ‘வெற்றி தீபாவளி’ பரிசாக ஆவின் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி காலத்தில் மக்கள் அதிக அளவில் நெய் மற்றும் இனிப்புகளை வாங்குவார்கள் என்பது தெரிந்தும், அந்தச் சூழலைப் பயன்படுத்தி விலையை உயர்த்துவது என்ன மாதிரியான அணுகுமுறை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் வியாபாரிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பார்கள். ஆனால், தமிழக அரசு அதற்கு மாறாகச் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், நடிகராக இருந்தபோது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் படங்களின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே பாணியில் தீபாவளி நேரத்தில் இனிப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதா எனக் கேலி செய்துள்ளார். இனிப்புகளைப் பிளாக்கில் விற்பனை செய்யும் நிலைக்குச் சென்றுவிட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார். அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்பதால், அதைத் தடுப்பதற்காகவே ‘வெற்றி தீபாவளி’ திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறி, எந்த அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப் போகிறார் என முதல்வர் விஜய்யை நோக்கியும் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலை உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.