சென்னை ஆவடி விமானப்படை நிலையத்திற்கு, தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், மதிப்புமிக்க ‘யூனிட் சைட்டேஷன்’ பாராட்டுப் பத்திரம் வழங்கி கவுரவித்துள்ளார். மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. ஆவடி விமானப்படை நிலையத்தின் கமாண்டிங் அதிகாரியான ஏர் கமடோர் பிரதீப் சர்மா, கவர்னரிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் விமானப்படை குடும்ப நல சங்கத்தின் தலைவி குரூப் கேப்டன் ரச்னா சர்மா (ஓய்வு), விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். ஆவடி விமானப்படை நிலையத்துடன் இணைந்து, சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG) 27-வது சிறப்பு கூட்டு குழுமத்திற்கும் கவர்னரின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் தளவாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவடி விமானப்படை நிலையம் முக்கியப் பொறுப்பு வகிக்கிறது. விமானப்படையின் பல்வேறு பிரிவுகளுக்குத் தேவையான சீருடைகள், வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணிகளை இந்த நிலையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், சிறிய ரக ஆயுதங்களைப் பழுதுபார்த்தல், பராமரித்தல், மறுசீரமைத்தல் மற்றும் அவற்றுக்கான வெடிமருந்துகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளையும் கவனித்து வருகிறது. விமானப்படைக்குத் தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் இந்த நிலையம் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றும் போக்குவரத்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விமானச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பராமரிக்கும் பணியாளர்களுக்கும் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படுகிறது. விமானப்படைத் தளங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களின் தொழில்முறைத் திறனையும் தயார் நிலையையும் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ‘யூனிட் சைட்டேஷன்’ விருது, ஆவடி விமானப்படை நிலையத்தில் பணியாற்றும் அனைவரின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. விமானப்படையின் உயரிய சேவை மரபுகளைப் பின்பற்றி, தளவாடத் தயார்நிலை, செயல்பாட்டுத் திறன், பயிற்சி மற்றும் பணியாளர் நலன் ஆகியவற்றில் நிலையம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணிகளை இந்த விருது அங்கீகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நலனிலும் ஆவடி விமானப்படை நிலையம் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. நிலையத்தின் இந்தச் சாதனைகளுக்கு, அதன் கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் பிரதீப் சர்மா மற்றும் விமானப்படை குடும்ப நல சங்கத்தின் தலைவி குரூப் கேப்டன் ரச்னா சர்மா (ஓய்வு) ஆகியோரின் தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் தொடர் முயற்சிகள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுத் திறன், தொழில்முறை மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களை வலுப்படுத்துவதில் இவர்களின் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.