தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை அடையாறு அருகே நேற்று இரவு தவெக நிர்வாகி கண்ணன் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தலைநகரின் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் இதுபோன்ற கொடூர சம்பவம் நடைபெற்றிருப்பது கவலை அளிப்பதாகவும், தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள கிராமங்களில் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து நினைக்கும்போதே அச்சமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணியாற்றும் நடைமுறையைப் போல மட்டுமே முதல்-அமைச்சர் விஜய் செயல்பட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், கிட்டத்தட்ட 200 கொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் வசனம் பேசுவது போல் சட்டமன்றத்திலும் பேசிக்கொண்டிருக்கும் ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்பதை முதலில் உணர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கையை அசைப்பது, பாட்டிக்கு கண்ணாடி வழங்குவது போன்ற காட்சிகளில் ரீல்ஸ் உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையிலும் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.