திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் கவிதாவைத் தாக்கியதாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் முன்னாள் ராணுவ வீரருமான வாசு உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான வாசு (41), மதுபோதையில் அப்பகுதி மக்களுடன் தகராறில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவருடன் அவரது நண்பர் குமரகுரு (41) என்பவரும் இருந்துள்ளார். இருவரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, கண்ணமங்கலம் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த பின்னரும் மதுபோதையில் இருந்த வாசு, பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் கவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு தீவிரமடைந்த நிலையில், வாசுவும் குமரகுருவும் சேர்ந்து எஸ்ஐ கவிதாவைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல் நிலையத்திலேயே பெண் காவல் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் அதிகாரியைத் தாக்குதல், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, வாசு மற்றும் குமரகுரு ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்குள் பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையும் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.