ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், வரும் 19-ஆம் தேதி ஆயுத பூஜையும், 20-ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளன. அரசு ஊழியர்களுக்கு நாளை (17-ஆம் தேதி) சனிக்கிழமை முதல் 20-ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால், பலரும் இன்று தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, விமானப் பயணங்களுக்கான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டண விவரங்கள்: - தூத்துக்குடி: வழக்கமான கட்டணம் ரூ.7,201 ஆக உள்ள நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,363 ஆக உயர்ந்துள்ளது. - மதுரை:சாதாரண நாட்களில் ரூ.5,066 ஆக இருக்கும் கட்டணம், இன்று ரூ.8,527 ஆக உள்ளது. - கோவை: வழக்கமாக ரூ.4,966 ஆக உள்ள கட்டணம், இன்றைக்கு ரூ.16,234 ஆக அதிகரித்துள்ளது. -திருச்சி: இன்றைய விமானக் கட்டணம் ரூ.9,896 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - சேலம்:வழக்கமான ரூ.4,001 கட்டணம், இன்று ரூ.12,132 ஆக உயர்ந்துள்ளது. - கொச்சி:இன்றைய விமானக் கட்டணம் ரூ.18,255 ஆக உள்ளது. - பெங்களூரு: விமானக் கட்டணம் ரூ.18,041 ஆக அதிகரித்துள்ளது. - ஹைதராபாத்:சாதாரண நாட்களில் ரூ.4,467 ஆக இருக்கும் கட்டணம், இன்று ரூ.21,665 ஆக உயர்ந்துள்ளது. பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், விமானக் கட்டண உயர்வு அவர்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.