ஆம்னி பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி! 3 பேருக்கு தீவிர சிகிச்சை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆம்னி பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி! 3 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆம்னி பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி! 3 பேருக்கு தீவிர சிகிச்சை

பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). சென்னையில் கூலி வேலை செய்து வரும் இவர், தனது தம்பி ரஜினி குமாரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மனைவி சூர்யா (35) மற்றும் நண்பர்கள் பிரபாகரன் (30), காளீஸ்வரன் (25), கண்ணதாசன் (22), ஜான் கென்னடி (35), சரண்யா (23) ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் 7 பேரும் காரில் சென்னை திரும்பினர். காரை கண்ணதாசன் ஓட்டிச் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் காரில் இருந்த பிரபாகரன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து பெரம்பலூர் டவுன் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து, காருக்குள் சிக்கியிருந்த மற்ற 5 பேரை மீட்டனர். அவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக்கும், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி சூர்யாவும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இதனிடையே, படுகாயமடைந்த கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகிய 3 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 34 பேரும் மாற்றுப் பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், விபத்தில் சிக்கிய வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் (45) கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.