ஆட்டோவை விலைக்கு வாங்கி தமிழகத்தைச் சுற்றிவரும் இங்கிலாந்து தம்பதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆட்டோவை விலைக்கு வாங்கி தமிழகத்தைச் சுற்றிவரும் இங்கிலாந்து தம்பதி

ஆட்டோவை விலைக்கு வாங்கி தமிழகத்தைச் சுற்றிவரும் இங்கிலாந்து தம்பதி

இங்கிலாந்தைச் சேர்ந்த மோரிஸ் (38), அவரது மனைவி ஒலிவியா (34) ஆகியோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக வித்தியாசமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ரூ.1.48 லட்சம் செலவில் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ள இந்தத் தம்பதி, அதில் தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த இவர்கள், இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்படி, ஆட்டோ ஒன்றை வாங்கிய மோரிஸ், அதனைத் தானே ஓட்டி வருகிறார். தங்களுக்குத் தேவையான உடைமைகளையும் ஆட்டோவில் எடுத்துச் செல்லும் இவர்கள், வழியில் உள்ள பல்வேறு இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர். மகாபலிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து ராமேசுவரம் வந்தடைந்தனர். அங்கிருந்து தனுஷ்கோடிக்குச் சென்று கடல் மற்றும் கடற்கரையின் இயற்கை அழகை ரசித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று தூத்துக்குடி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கினர். இந்தியக் கலாசாரத்தை அறிந்துகொள்ளும் பயணம்! தங்களது பயணம் குறித்து அந்த வெளிநாட்டுத் தம்பதி கூறுகையில், இந்திய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் ஆட்டோவில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்தனர். தினமும் சுமார் 100 முதல் 200 கிலோமீட்டர் வரை பயணம் செய்வதாகவும், தமிழக மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், கலைகள் மற்றும் கலாசாரங்கள் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கூறினர். குறிப்பாக, தமிழக மக்களின் உணவு வகைகள் தங்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். தற்போது ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் அவர்கள், அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து கோவாவுக்குச் சென்றுவிட்டு, இறுதியாக டெல்லியில் தங்களது இந்தியச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். இந்தப் பயணம் முழுமையடைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என அந்தத் தம்பதி தெரிவித்தனர்.