ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி செப்.8-ல் போராட்டம்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி செப்.8-ல் போராட்டம்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி செப்.8-ல் போராட்டம்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி, வரும் செப்டம்பர் 8-ம் தேதி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அன்று காலை கோட்டை முற்றுகை அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறைந்தபட்சமாக ரூ.100 கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ஆட்டோக்களுக்கான கட்டணத்தை அரசு முறைப்படி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆட்சி காலத்திலிருந்தே தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை தடை செய்ய வேண்டும் என்றும், ஆட்டோ மீட்டர் கட்டணமாக முதல் 1.5 கிலோமீட்டருக்கு ரூ.60, அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30 என நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.மேலும், சட்டசபையில் நடைபெறும் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது இதுதொடர்பான அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதம் செப்டம்பர் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த ஆட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க மாநில செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்கும் விவகாரம் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.தங்களது கோரிக்கைகளை அரசிடம் பலமுறை எடுத்துரைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், ஆட்டோ தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் குறைந்தபட்ச கட்டணம் குறித்த அறிவிப்பும் வெளியாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.அதேபோல், பைக் டாக்சி சேவைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான அறிவிப்பையும் வெளியிடக் கோரி, செப்டம்பர் 8-ம் தேதி காலை கோட்டை முற்றுகை அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்தப் போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கும் என்றும் எஸ். பாலசுப்பிரமணியம் கூறினார்.