'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 2 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.இன்று அந்த போராட்டம் 36-வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றவாளிகளுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.இதற்கிடையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளும் மத்திய அரசும் நேற்று டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, "எங்களின் இலக்கை அடைந்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைத்தள பதிவில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை பாராட்டியுள்ளார்.அந்த பதிவில், "என் அன்புக்குரிய கரப்பான் பூச்சிகளுக்கு வாழ்த்துகள். சோனம் வாங்சுக் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் என் பாராட்டுகள். அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஆட்சியையே முழங்காலிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த டெல்லி போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் நேரில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.