ஆடிப்பூர திருவிழாவில் கோலாகலமான ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆடிப்பூர திருவிழாவில் கோலாகலமான ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம்

ஆடிப்பூர திருவிழாவில் கோலாகலமான ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.ஆண்டாள் அவதரித்த திருநாளான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களிடையே தனித்துவமான முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா நாட்களில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். கடந்த 10-ஆம் தேதி ஐந்து கருட சேவை நடைபெற்றது. மேலும், நேற்று முன்தினம் இரவு ஆண்டாளின் மடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் காட்சியளித்த நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணன் கோவிலிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.திருவிழாவின் உச்ச நிகழ்வாக இன்று நடைபெற்ற தேரோட்டத்தை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். தீபாராதனைக்குப் பிறகு தேரின் வடம் பிடிக்கும் நிகழ்வு தொடங்கியது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி, “கோவிந்தா... கோவிந்தா...” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை இழுத்தனர். தேரோடும் வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, திருத்தேரில் வலம் வந்த ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் தரிசித்தனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் முழுவதும் திருவிழா களைகட்டியது.தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சார்பில் நகரின் பல இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், நடமாடும் கழிவறை வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேபோல், தீயணைப்பு மற்றும் சுகாதாரத் துறையினரும் அவசரகால பணிகளுக்காக தயார் நிலையில் இருந்தனர்.