ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

31 Jul 2026 www.thinathulir.com

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதி

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெறும் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவிற்காக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வனப்பகுதியில் அமலில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி வழிபட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை விதிமுறைகளை மதித்து செயல்படுவதுடன், நான்கு மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறும், அதன் தோற்றுவாயான வனப்பகுதியின் இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.திருவிழா காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆறு நாட்கள் வரை பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பக்தர்கள் தங்களது வழிபாட்டு பொருட்களை எடுத்துச் செல்ல ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பாபநாசம் சோதனைச் சாவடி வழியாக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதேசமயம், ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் கோவிலில் முன்னேற்பாட்டு பணிகள் நடைபெறுவதால் அரசு பேருந்துகள் உட்பட எந்தவித வாகனங்களும் சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படாது.ஆகஸ்ட் 10 முதல் 12 வரை நடைபெறும் பாரம்பரிய சடங்குகளுக்காக பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர முடியும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலை குறைந்த எண்ணிக்கையிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். வழிபாட்டு பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்ட தனியார் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். கோவிலிலிருந்து திரும்பும் பக்தர்களுக்காக அரசு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.மேலும், ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவாரப் பணிகள் நடைபெறுவதால், அந்த இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் பாபநாசம் சோதனைச் சாவடியை தாண்டி செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17 முதல் வழக்கமான நடைமுறையின்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று வரலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.