ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து வாழ்த்தினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், விஷால் தென்னரசு கயல்விழி, கமலினி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை அமைச்சர் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.7 லட்சம் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்படி, ஜப்பானில் நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற 37 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.2.59 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கத்துக்கான தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், வெண்கலப் பதக்கத்துக்கான தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதை ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாகவும் வீரர், வீராங்கனைகள் ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். அவர்களில் 11 பேர் இணைந்து 2 தங்கம், 3 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தை 54.75 வினாடிகளில் கடந்து, பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார். மகளிர் கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலேயே முதன்முறையாக பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6.60 கோடி ஊக்கத்தொகை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.6.60 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. * மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி வழங்கப்படுகிறது. * மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற கமலினிக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. * கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி மற்றும் ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற விஷாலுக்கு ரூ.80 லட்சம் வழங்கப்படுகிறது. * ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் ஆடவர் அணிப் பிரிவில் வெண்கலம் வென்ற அபய் சிங்கிற்கு ரூ.80 லட்சம் வழங்கப்படுகிறது. * ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் அணி பிரிவுகளில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது. * ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் மற்றும் ஆடவர் அணி பிரிவுகளில் வெண்கலம் வென்ற வேலவன் செந்தில்குமாருக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது. * தடகள கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற அபிநயாவுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. * மகளிர் கோலூன்றித் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. * ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற ராஜேஷ் ரமேஷுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. * பேட்மிண்டன் ஆடவர் அணியில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. * ஸ்குவாஷ் மகளிர் அணியில் வெண்கலம் வென்ற ஷமீனா ரியாஸுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் (நிர்வாகம்) ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.