45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 12-வது நாளான நேற்று இந்தியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்தது. வில்வித்தையில் 3 தங்கப் பதக்கங்களும், துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கப் பதக்கமும் என ஒரே நாளில் இந்தியா 4 தங்கங்களை வென்றது. இந்நிலையில், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஸ்கிப் பிரிவு படகோட்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரின்ஸ் நோபல் மற்றும் மனு பிரான்சிஸ் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன் மூலம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகோட்டுதல் பிரிவில் இந்தியா தனது முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.