ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் இன்று தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நாளை மறுநாள் (19-ந்தேதி) தொடங்கி, அடுத்த மாதம் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன. மொத்தம் 43 விளையாட்டுகளில் 469 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த 10,840 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் 36 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 35 பேரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 21 வீரர்கள் மற்றும் 14 வீராங்கனைகள் அடங்குவர். ஆசிய விளையாட்டின் தொடக்க விழா வரும் 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கூடைப்பந்து 10-ந்தேதியும், கால்பந்து 14-ந்தேதியும் தொடங்கின. மாடர்ன் பென்டத்லான் மற்றும் கைப்பந்து போட்டிகள் 16-ந்தேதி தொடங்கின. பெண்கள் கிரிக்கெட் மற்றும் டெக்பால் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஆக்கி மற்றும் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன. பெண்கள் கிரிக்கெட் போட்டி 20 ஓவர் முறையில் அய்ச்சி நகரில் இன்று முதல் 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான இந்தியாவுடன் ஜப்பான், வங்காளதேசம், சீனா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து அணிகள் என மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கின்றன. நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி கால்இறுதி சுற்றில் இருந்து தொடங்குகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நிறைவடைந்த பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியின் உற்சாகத்துடன் இந்திய அணி ஆசிய விளையாட்டிலும் களம் காண்கிறது. கடந்த முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி, இந்த முறையும் அந்த சாதனையை தொடரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அதிகாலை 5.30 மணிக்கு வங்காளதேசம்-சீனா அணிகளும், காலை 10.30 மணிக்கு பாகிஸ்தான்-தாய்லாந்து அணிகளும் மோதுகின்றன. நாளைய கால்இறுதி ஆட்டங்களில் அதிகாலை 5.30 மணிக்கு இலங்கை-மலேசியா அணிகளும், காலை 10.30 மணிக்கு இந்தியா-ஜப்பான் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.