நடிகர் விஜய் 1993 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் எப்படி தோற்றமளித்தாரோ, அதேபோன்ற தோற்றத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இருப்பதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் ‘சிக்மா’ மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி அவர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சயை பார்க்கும்போது, 1993, 1994, 1995 காலகட்டத்தில் விஜய் எப்படி இருந்தாரோ, அதேபோல் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், ஜேசன் சஞ்சயின் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாட்டி சோபாவின் குணநலன்களும், கதை எழுதும் திறனும் அவருக்கு மரபணு வழியாக வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவருக்கு இயக்குநராகும் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சிரஞ்சீவி கூறினார். தனது தாத்தாவும் தந்தையும் நடிகர்களாக திரையுலகில் உயர்ந்த நிலையை அடைந்ததைப் போல, ஜேசன் சஞ்சயும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தான் விரும்பும் உயரத்தையும், திரையுலகில் உச்ச நிலையையும் நிச்சயம் அடைவார் என்றும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.