மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அமித்ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, பா.ஜனதா நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை, சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன்படி, இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் சுபம் வர்மா, ராகுல் காந்தியை வழக்கில் இருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார். தீர்ப்பு வெளியானபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகளைப் பகிர்ந்தும், டிரம்ஸ் இசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதையொட்டி, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.