அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர்... ரூ.52 கோடிக்கு டெண்டர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர்... ரூ.52 கோடிக்கு டெண்டர் வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், மழைக்கோட், ஸ்வெட்டர்... ரூ.52 கோடிக்கு டெண்டர் வெளியீடு

தமிழகத்தில் 2027-2028-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் கம்பளி ஸ்வெட்டர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான கொள்முதல் பணிகளை மேற்கொள்ள ஒரே நாளில் 4 தனித்தனி டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.52.05 கோடியாகும். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (TNTB&ESC) இந்த டெண்டர்களை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வாங்கி வழங்குவதற்காக ரூ.37 கோடியே 24 லட்சம் ஒதுக்கீட்டில் முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஷூவுடன் வழங்கப்படும் சாக்ஸ்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.9 கோடியே 7 லட்சம் மதிப்பில் மற்றொரு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி மாணவர்களுக்கு மழைக்கோட் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மழைக்காலத்திலும் பள்ளிக்குச் சென்று வருவதற்கு வசதியாக மழைக்கோட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் 91,771 மழைக்கோட்டுகளை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மழைக்கோட்டுகள் 'செர்ரி ரெட்' (Cherry Red) நிறத்தில் தயாரிக்கப்பட உள்ளன. 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில் அவை வழங்கப்பட இருக்கின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிப் பள்ளி மாணவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல், சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, கோவை மாவட்டத்தின் வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மழைக்கோட்டுகள் கிடைக்க உள்ளன. குளிரிலிருந்து பாதுகாக்க ஸ்வெட்டர் குளிர் அதிகமாக நிலவும் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கம்பளி ஸ்வெட்டர்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பில் நான்காவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் கம்பளி ஸ்வெட்டர் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்காக மொத்தம் ரூ.52 கோடியே 5 லட்சம் மதிப்பில் 4 டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. 2027-2028-ம் கல்வியாண்டு தொடங்கும்போது மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முன்கூட்டியே இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.