அரசு முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறுவதால் கடன் தேவை குறைந்துள்ளது: தங்கம் தென்னரசு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசு முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறுவதால் கடன் தேவை குறைந்துள்ளது: தங்கம் தென்னரசு

அரசு முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறுவதால் கடன் தேவை குறைந்துள்ளது: தங்கம் தென்னரசு

தமிழக அரசு கடன் வாங்கிய தொகை குறைந்திருப்பதை சாதனையாகக் கூறும் நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகள் எவ்வளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், தமிழக அரசு மாநில அரசுப் பத்திரங்கள் வாயிலாகப் பெற்ற கடன் முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் திரட்டுவது குறைந்துள்ளது. இதனை நிதி நிர்வாகத்தின் வெற்றியாகக் கூறும் தவெக அரசு, கடன் தேவை குறைந்ததற்கான காரணத்தையும், இந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் மூலதனச் செலவுகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) தற்காலிக மாதாந்திர கணக்குகளின்படி, 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.13,002.22 கோடி செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தவெக அரசு, இந்த நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கியுள்ள தொகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் எவ்வளவு செலவிட்டுள்ளது என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் திட்டங்களுக்காக இன்னும் வழங்கப்படாமல் உள்ள தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை தாமதப்படுத்துவதும், முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதும் அரசின் நிதி இருப்பை அதிகமாகக் காட்ட உதவலாம். ஆனால், இதனால் கடன் வாங்குவது குறைந்திருந்தால் அதை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பணிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பது உண்மையான சேமிப்பாகுமா என்றும் அவர் வினவியுள்ளார். முதல் அரையாண்டில் கடன் அளவு குறைந்துள்ளதாகக் கூறும் தமிழக அரசு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியுள்ளார். முந்தைய காலாண்டில் ரூ.23,500 கோடி கடன் திரட்டப்பட்ட நிலையில், அடுத்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள தொகை அதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைவாக இருப்பதால், வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்ள முடியாமல் அரசு சிரமப்படுவதாகவும், அதன் காரணமாகவே கடன் தேவை குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகள் நடைபெறாததால் சாலைகள் மோசமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்டிடப் பணிகள் பாதியில் நிற்பதுடன், ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடன் குறைந்ததை சாதனையாக முன்னிறுத்துவதற்குப் பதிலாக, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவுகள், முடிக்கப்பட்ட பணிகளுக்காக இன்னும் வழங்கப்படாத தொகைகள் உள்ளிட்ட அனைத்து நிதி விவரங்களையும் தவெக அரசு வெளிப்படையாக அறிவித்து மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.