கேரளாவில் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துவது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) நடத்தியதாக கூறப்படும் கூட்டம் குறித்து, மாநில சுகாதாரத்துறை மந்திரி முரளீதரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அரசு சார்பில் அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் பணியை அனுமதிப்பது தற்போதைய அரசின் கொள்கை கிடையாது. இதுதொடர்பாக அரசுக்கு எந்த கோரிக்கையும் வந்ததில்லை என்றும், இதுகுறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.முந்தைய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் கூட்டம் நடத்தப்படுவது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) தமக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையிலேயே அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தான் அறிவுறுத்தியதாகவும் மந்திரி தெரிவித்தார். மேலும், பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை செப்டம்பர் மாதத்தில்நடைமுறையில் உள்ளதாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.எனவே, அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக் நடத்துவதற்கு தற்போதைய அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதற்கான எந்த கோரிக்கையும் அரசிடம் வரவில்லை என்றும், கேரளாவில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் மந்திரி முரளீதரன் கூறினார்.