சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கான நேரக் கட்டுப்பாடு இனி கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே நோயாளிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படும். மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெளியிலுள்ள கடைகளில் இருந்து உணவு வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். வீடுகளில் இருந்து உணவு கொண்டு வருபவர்கள், அதனை பிளாஸ்டிக் பைகளில் அல்லாமல் பாத்திரங்களில் எடுத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசு மருத்துவமனைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது பொதுமக்களிடையே எதிர்ப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிட சிறந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பு என்றும், அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த இலக்கை அடைவோம் என்றும் தெரிவித்தார். சுகாதாரத்துறையின் முதன்மையான நோக்கம் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார். சுகாதாரம் தொடர்பான தகவல்கள் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும், பொதுமக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாட்டு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெற இரு‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்கம் தள்ளிப்போகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறிய அவர், திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானதாக இருக்கும் என்றும், ஒவ்வொரு மோதிரத்திலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும் என்றும் தெரிவித்தார். தங்கத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் உறுதி அளித்தார். இதனிடையே, பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் காலகட்டம் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.ஒவ்வொரு வீடாகச் சென்று மழைநீர் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.