அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு இருந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மானூர் பகுதியில் உள்ள இந்த அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு கடந்த 5-ந்தேதி பள்ளி திறக்கப்பட்டது. அன்றைய தினம் காலை பணிக்கு வந்த சத்துணவு ஊழியர்கள், மாணவர்களுக்காக குடிநீர் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தொட்டியை பார்த்தபோது, அதில் மனிதக்கழிவு இருப்பதை கண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த தொட்டி அப்புறப்படுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கீரனூர் போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால், பிளாஸ்டிக் தொட்டி அமைத்து அதில் தினமும் தண்ணீர் நிரப்பி மாணவர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார். கடந்த 5-ந்தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, தண்ணீர் நிரப்புவதற்காக தொட்டியை பார்த்த சத்துணவு பணியாளர்கள் அதில் மனிதக்கழிவு இருப்பதை கண்டதாகவும் அவர் கூறினார். அதன்பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு அப்புறப்படுத்தி தனியாக வைக்கப்பட்டதாகவும், தொட்டியில் தண்ணீர் இல்லாத நிலையில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் அந்த தண்ணீரை குடித்திருக்க வாய்ப்பில்லை என்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். சுகாதாரத்துறை அலுவலர்களும் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்ததாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையவரை கண்டறிய பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், பள்ளியில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தெரிவித்தனர். பள்ளிக்கு அருகிலுள்ள பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். அதே நேரத்தில், பள்ளி நிர்வாகம் வளாகத்தை தூய்மையாக பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் முறையான குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.