இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘அரசன்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த காலகட்டத்தில் படம் திரைக்கு வராது என்று கூறினார். படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்ய விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் படம் அமையும் என்றும் தெரிவித்தார்.மேலும், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ‘The World of Arasan’ படத்தின் க்ளிம்ப்ஸ், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிடப்படும் என்றும் சிலம்பரசன் கூறினார்.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பொங்கல் வெளியீட்டை இலக்காகக் கொண்டு படக்குழு செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பொங்கலுக்கு படம் வெளியாகாது என்பதை சிலம்பரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.