தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் திடீர் சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் பணத்தின் அளவும் கவனம் ஈர்த்து வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 55 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 22 துறைகள் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குகின்றன. இந்தத் துறைகளின் அலுவலகங்களை மக்கள் அணுகும்போது, சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்வதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பொதுமக்களில் சிலர் தேவையான ஆவணங்கள் இல்லாமல் அரசு அலுவலகங்களை அணுகுவதும், லஞ்சம் கேட்கப்படும் சூழலுக்கு ஒரு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. லஞ்சப் புகார்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும், அரசு அலுவலகங்களில் “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. “அவர்கள் கொடுப்பதால் நாங்கள் வாங்குகிறோம்” என சில அரசு ஊழியர்கள் கூறுவதும், “அவர்கள் கேட்டதால் நாங்கள் கொடுத்தோம்” என பொதுமக்கள் கூறுவதும் தொடர்கிறது. இதனால், லஞ்ச நடைமுறைக்கு முதலில் காரணம் யார் என்ற கேள்விக்கு தெளிவான முடிவு கிடைக்காத நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது த.வெ.க. அரசு பொறுப்பில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், லஞ்சத்தை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் திடீர் சோதனைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 மாதங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சப் பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரொக்கமாக மட்டுமின்றி ஜிபே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாகவும் லஞ்சம் பெறப்பட்டிருப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 36 மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர், நகராட்சி, பஞ்சாயத்து, வட்டார வளர்ச்சி உள்ளிட்ட அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 207 ரொக்கப் பணமும், ரூ.1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 459 ஜிபே பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணமும் கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ஆகும். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் போலி ரசீது பயன்படுத்தி வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் சோதனையில் தெரியவந்தது. இதன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.12,750-ம் கணக்கில் அடங்கும். அரசுக்கு வருவாயாக செல்ல வேண்டிய தொகை அரசு அலுவலகத்திலேயே முறைகேடாக கையாளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், லஞ்சம் வாங்கும் நடைமுறை தொடரும் நிலையில், சோதனைகள் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. லஞ்சத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள், தொடர் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நிர்வாக நடைமுறைகள் அவசியமாகின்றன. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது என்பதே தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.