தலைமைச் செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, திமுக சட்டமன்ற கொறடா எ.வ. வேலு உள்ளிட்ட அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினர். மிசா தொடர்பாக முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துகளை சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த மனுவின் நிலை குறித்து சபாநாயகரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதனிடையே, சட்டசபையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரும் அளிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமானவரை அவதூறாக பேசுவது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்தனர். அதேபோல், சட்டசபையில் இல்லாத நபர்கள் குறித்து பேசுவதும் விதிமீறல் என அவர்கள் கூறினர். மிசா விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அளித்துள்ள புகார் குறித்து ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூறினர். சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிப்பதும் விதிமீறல் என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், “இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் தவெக அமைச்சரவை ஈடுபடுகிறது” என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்தனர்.