அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஞானசவுந்தரி தாக்கல் செய்த மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் பரிவர்த்தனைகள் நடந்ததாக குற்றம்சாட்டி, நியமனத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒழுக்கம், கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி ஞானசவுந்தரியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் இனிமேல் அவருடன் கட்சி தொடர்போ அல்லது ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.