சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், கடந்த 22-ந்தேதி தாரணி என்ற பெண் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் இருந்த மழைநீர் தெறித்து இருவரின் மீதும் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாரணி, பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மிரட்டும் வகையில் அவர் பேசியதாகத் தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாரணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து தாரணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கோபத்தில் பேசிவிட்டதாகவும், இந்த விவகாரத்துக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அந்த வீடியோவில் தாரணி கூறியுள்ளார்.