அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரப் பகுதியில் உள்ள மிஸ்ஸிஸிப்பி ஆற்றில், ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ என்ற சொகுசுக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 129 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். லூசியானா, மிஸ்ஸிஸிப்பி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுச் சென்ற அந்தக் கப்பல், தனது 8 நாள் சொகுசுப் பயணத்தை நிறைவு செய்யும் தருவாயில் விபத்தில் சிக்கியது. அப்போது ‘அட்லாண்டிக் ஆஸ்பால்ட்’ என்ற சரக்குக் கப்பல், சொகுசுக் கப்பல் மீது மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் சொகுசுக் கப்பல் ஒருபுறமாக நீரில் சாய்ந்தது. இதனால் கப்பலுக்குள் சிக்கிய பயணிகள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படகோட்டிகள் மற்றும் பல்வேறு மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்றபோது, மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் படகுகள் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினரின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். 11 ஆண்டுகள் பழமையான இந்த சொகுசுக் கப்பல் நான்கு தளங்களைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக 150 பேர் வரை பயணிக்க முடியும். கண்ணாடியால் மூடப்பட்ட உணவகம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான மூன்று அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் உள்ளன. மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் நடைபெற்ற இந்த விபத்து ஓர் அதிசயமான சம்பவம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.