அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறையில் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதன்படி, குழந்தையின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகலாம். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-வது முறையாக பதவியேற்றது முதல், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.தற்போதைய நடைமுறையில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோர் குழந்தையுடனான உறவை நிரூபிப்பதுடன், புகைப்பட அடையாள ஆவணத்தை வழங்கினால் போதுமானதாக உள்ளது. ஆனால் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், இதனுடன் பெற்றோரின் அமெரிக்க குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. இந்நிலையில், பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.