அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் முன்னிலை பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் ஒரு பகுதியாக நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் கரேன் பாஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர கவுன்சில் உறுப்பினர் நித்யா ராமன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது கரேன் பாஸ் முன்னிலையில் இருந்தார். ஆனால், தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நித்யா ராமன் அவரை முந்தி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். இதுவரை சுமார் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால், தேர்தல் முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் பிறந்த நித்யா ராமன், நகர்ப்புறத் திட்டமிடல் துறையில் கல்வி பயின்றவர். கடந்த 2020-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் உறுப்பினராகத் தேர்வானார். தற்போது மேயர் பதவிக்காகப் போட்டியிடும் அவர், தனது தேர்தல் பிரசாரத்தில் வீட்டு வசதி, வீடற்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், நகரின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தார். ஏற்கனவே நியூயார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் தேர்தலில் நித்யா ராமன் முன்னிலை பெற்றிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையாததால் நித்யா ராமனின் வெற்றி உறுதியாகவில்லை. இறுதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அடுத்த மேயர் யார் என்பது தெரியவரும்.