அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று, ஓஹியோவின் முதல் பெண் கவர்னர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளார். 41 வயதான விவேக் ராமசாமிக்கும், 60 வயதான ஏமி ஆக்டனுக்கும் இடையே இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஏமி ஆக்டன் வெற்றியைத் தனதாக்கினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓஹியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, இந்தத் தேர்தல் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார். சில தருணங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கசப்பான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், ஏமி ஆக்டனின் ஆட்சி சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தேர்தல் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்தார். இந்தத் தேர்தலில் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் முக்கிய ஆலோசகர்களும் ஆதரவு அளித்திருந்தனர். இருப்பினும், அவரால் வெற்றியைப் பெற முடியவில்லை. ஏற்கெனவே 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் டொனால்டு டிரம்பை எதிர்த்து விவேக் ராமசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் டிரம்ப் தலைமையிலான அரசில், மத்திய அரசின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் அரசுத் திறன் துறை திட்டத்தை உருவாக்க எலான் மஸ்க்கிற்கு உதவினார். அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் டிரம்பின் ஆதரவைப் பெற்ற விவேக் ராமசாமிக்கு ஆதரவாக, டிரம்ப் நேரடியாக ஓஹியோ மாகாணத்துக்குச் சென்று பிரசாரம் செய்தார். இவ்வளவு அரசியல் ஆதரவு இருந்தபோதிலும், கவர்னர் தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியைச் சந்தித்துள்ளார். விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.