இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படும் அவரது பிறந்தநாளைத் தமிழக அரசு இளைஞர் மறுமலர்ச்சி நாளாக கடைப்பிடித்து வருகிறது. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில், அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அப்துல் கலாமை வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே கலாமின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றும், அந்த இலக்கை அடைவதற்காக இளைஞர்களைத் தயார்படுத்தும் பணியில் அவர் தனது வாழ்நாள் இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயல்பட்டார் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், கலாம் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, அவர் காட்டிய வழியில் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது பிறந்தநாளில், அந்த இலக்கை எட்டுவதற்கு இந்திய மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.