விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கினார். ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், அப்பா - மகள் இடையேயான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘நாநா குட்டி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் நாயகனாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் விஜய் ஆண்டனியே பணியாற்றியுள்ளார். முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் ரிலீஸ், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தேதியும் மாற்றப்பட்டு, தற்போது நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது. இதற்கிடையில், படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்து பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டிரெய்லர் உள்ளிட்ட அடுத்தடுத்த விளம்பரப் பணிகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திட்டமிட்டபடி நவம்பர் 20-ம் தேதி ‘அப்பா குட்டி’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.