அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சென்னை பள்ளி முன்னாள் மாணவர்கள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சென்னை பள்ளி முன்னாள் மாணவர்கள்

அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சென்னை பள்ளி முன்னாள் மாணவர்கள்

சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆவிச்சி உயர்நிலைப் பள்ளியில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி தங்களது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. ஏ.வி.எம். ஸ்டூடியோவை நிறுவிய ஏ.வி. மெய்யப்ப செட்டியார், தனது தந்தையின் நினைவாக 1963-ம் ஆண்டு இந்தப் பள்ளியைத் தொடங்கினார். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில், 1975-76-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் தற்போது ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துள்ளனர். ஒரே வகுப்பறையில் ஒன்றாகப் படித்த நண்பர்கள், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் வெவ்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து உயர்கல்வி பயின்றனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த அவர்கள், தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில், பள்ளியின் பொன்விழா நிகழ்வையொட்டி பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், மீண்டும் பள்ளிப் பருவத்திற்கே திரும்பியதுபோல் உற்சாகமடைந்தனர். ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு அறிமுகம் செய்துகொண்டஅவர்கள், குடும்ப நலம் மற்றும் தற்போதைய வாழ்க்கை குறித்துப் பேசி மகிழ்ந்தனர். மேலும், ஒவ்வொருவரும் தற்போது வசிக்கும் இடம் குறித்தும் கேட்டறிந்தனர். ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு ஒரே பள்ளியில் நட்புடன் பழகியவர்கள், வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றிருந்தாலும், இன்று மீண்டும் ஒரே இடத்தில் சந்தித்து தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பள்ளி நாட்களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர்கள் உரையாடிய காட்சி, அங்கிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.