அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் நீதிமன்றத்தில் சரண்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் நீதிமன்றத்தில் சரண்

அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த டிரைவர் நீதிமன்றத்தில் சரண்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் உரிய அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகாரில், தேடப்பட்டு வந்த கார் டிரைவர் சரவணன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவில் பணம் வசூலித்து முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். தனியார் பள்ளிகளிடம் இருந்து பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் பணம் வசூலித்து, அதனை கட்சி நிதி என்ற பெயரில் அன்பில் மகேஷுக்கு லஞ்சமாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதற்கட்ட முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துக்குமாரின் கார் டிரைவர் சரவணன் தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தனியார் பள்ளிகளிடம் இருந்து முத்துக்குமார் வசூலித்த பணத்தை சரவணன் எடுத்துச் சென்று அன்பில் மகேஷின் வீட்டில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்தார். சரவணன் கைது செய்யப்படும் வரை அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழலில், தலைமறைவாக இருந்த சரவணன் இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜராகி சரணடைந்தார். ஏற்கெனவே இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சரவணனை, வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.