சீனாவில் மனிதர்களின் அரவணைப்புக்கு பழகிய கடல் நாய் ஒன்று, ஆழ்கடலில் மறுவாழ்வுக்காக விடப்பட்ட பின்னரும் அவர்களைப் பிரிய முடியாமல் சுமார் 200 கிலோமீட்டர் நீந்தி மீண்டும் அதே தீவுக்கு திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லியோனிங் மாகாணத்தில் உள்ள தசாங்ஷான் தீவில் கடந்த ஏப்ரல் மாதம் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 கடல் நாய்களில், 2 வயதான ‘நானா’ என்ற புள்ளி கடல் நாயும் இருந்தது. அப்பகுதி மக்கள் பல மாதங்களாக அதனை அன்புடன் பராமரித்து வந்தனர். உடல்நலம் முழுமையாக தேறியதைத் தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி நானா ஆழ்கடலில் மறுவாழ்வுக்காக விடுவிக்கப்பட்டது. ஆனால், கடலுக்குச் சென்ற நானா அங்கு தங்காமல் மீண்டும் மனிதர்களைத் தேடி பயணித்துள்ளது. கடந்த 13-ந்தேதி சுமார் 200 கிலோமீட்டர் தூரம் நீந்தி தசாங்ஷான் தீவின் கரைக்கு மீண்டும் வந்தடைந்தது. அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் தகவல்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அது கடந்து வந்த தூரத்தை உறுதி செய்தனர். நீண்ட தூரம் நீந்தி வந்ததால் நானா மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து உள்ளூர் மீனவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதற்கு உணவு வழங்கி மீண்டும் அன்புடன் பராமரிக்கத் தொடங்கினர். சீனாவின் முதல் தர பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள புள்ளி கடல் நாயான நானாவின் இந்த பாசப் பயணம், உலகம் முழுவதும் உள்ள விலங்கு பிரியர்களை நெகிழச் செய்துள்ளது.