அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்

அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு தனிப்பட்ட முறையில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் என்றாலும், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அனைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இல்லை எனக் கூறி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கபில் சிபல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். கபில் சிபல் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சிலருக்கு மனசாட்சி இருப்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும், ஞானேஷ் குமாருக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையர்களும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த 10 மாதங்களில் 14 முடிவுகளில் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இதனால், ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்து எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், பிஹார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், நாளிதழில் வெளியான தகவல்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில், அதிகாரிகள் எழுப்பும் தனிப்பட்ட கேள்விகள் அல்லது அவர்களின் கருத்துகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான கருத்து வேறுபாடாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் முழுமையான ஒப்புதலுடன் ஒருமனதாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.