அன்பில் மகேசுக்கு 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் - புழல் சிறையில் அடைப்பு...!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
27 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேசுக்கு 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் - புழல் சிறையில் அடைப்பு...!

அன்பில் மகேசுக்கு 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் - புழல் சிறையில் அடைப்பு...!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவது, பள்ளிகளைத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவருக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே, ரூ.100 கோடி முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து அவரைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்ததும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்யமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மறுபுறம், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்தன. வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, வரும் 6ஆம் தேதி வரை, அதாவது 10 நாட்கள், அவரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.