விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளான இன்று மும்பை நகரம் முழுவதும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மும்பையில் கடந்த 14-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. வீடுகள் மற்றும் பல்வேறு மண்டல்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மண்டல்களிலும், லட்சக்கணக்கான வீடுகளிலும் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. மும்பை புறநகர் பகுதிகள் மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களிலும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வழக்கமாக 3, 5, 7, 9 நாட்களுக்குப் பிறகு கடல், குளம், ஏரி மற்றும் மாநகராட்சி ஏற்பாடு செய்த செயற்கை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கடந்த 11 நாட்களாக மும்பை நகரம் பக்தி, ஆட்டம், பாட்டம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. 12 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெள்ளிக்கிழமை அனந்த சதுர்த்தசியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி பக்தர்கள் விநாயகர் சிலைகளை இயற்கை நீர்நிலைகள் அல்லது செயற்கை குளங்களில் கரைத்து வழிபாட்டை நிறைவு செய்து வருகின்றனர். இன்று பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா உள்ளிட்ட முக்கிய மண்டல்களின் விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட உள்ளன. சிலைகளுக்கு பாரம்பரிய முறைப்படி பூஜைகள் மற்றும் ஆரத்தி நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு மண்டல்களின் விசர்ஜன ஊர்வலங்கள் தொடங்கின. லால்பாக் ராஜா விநாயகர் சிலையின் ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது. "கணபதி பாபா மோரியா, மங்கல மூர்த்தி மோரியா" என்ற முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சின்ச்போக்லி, பைகுல்லா, டு டேங்க்ஸ், பிரார்தனா சமாஜ் வழியாக சிலை கிர்காவ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வழிநெடுகிலும் திரண்டுள்ள பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் லால்பாக் ராஜா விநாயகர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. சிலை நாளை காலை 8 மணியளவில் கடலில் கரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை புறநகர் பகுதிகள் மற்றும் மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன. பெரும்பாலான இடங்களில் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் இன்று நள்ளிரவு வரை நடைபெறும் என்றும், சில பகுதிகளில் நாளை அதிகாலை வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த சதுர்த்தசியையொட்டி விநாயகர் ஊர்வலங்களை காண மும்பையின் கிர்காவ் கடற்கரை, பரேல், சின்ச்போக்லி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். தாதர், ஜூகு, வெர்சோவா, மாகிம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளனர். விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்காக மும்பை மாநகரப் பகுதியில் மொத்தம் 450 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஜூகு, வெர்சோவா, சிவாஜிபார்க், மாகிம், கிர்காவ் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் இயற்கை நீர்நிலைகள் என 67 இடங்களும், 383 செயற்கை நீர்நிலைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளில் 1,132 உயிர்காக்கும் வீரர்கள், 6,052 ராட்சத விளக்குகள், 85 ஆம்புலன்சுகள் மற்றும் 10 மோட்டார் படகுகள் தயார் நிலையில் உள்ளன. கூட்ட நெரிசலை கண்காணித்து கட்டுப்படுத்த 228 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 75 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனந்த சதுர்த்தசியை முன்னிட்டு மும்பை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 இணை போலீஸ் கமிஷனர்கள், 9 கூடுதல் கமிஷனர்கள், 38 துணை கமிஷனர்கள், 66 உதவி கமிஷனர்கள், 3,213 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 24 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிவிரைவு படை, மாநில ரிசர்வ் போலீஸ், போர்ஸ் ஒன், கலவர தடுப்பு பிரிவு, டிரோன் தடுப்பு பிரிவு மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் தென்பட்டால், பொதுமக்கள் 100 அல்லது 112 என்ற எண்ணில் தொடர்புகொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.