அதிமுக மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தவெக அமைச்சர் நிர்மல்குமாருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் ரூ.30 கோடி வரை தருவதாகப் பேரம் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் இணைந்து சதி செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதுடன், அவற்றுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இயல், இசை, நாடக மன்றத் தலைவர் நியமனத்துக்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் கூறியவரே அமைச்சர் நிர்மல்குமார்தான். மேலும், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 மற்றும் ரூ.41.50 என்ற விலையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50-க்கு வாங்கியுள்ளது. இத்தகைய விவகாரங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அதிமுகவின் பெயரைத் தேவையின்றி பயன்படுத்துவதை அமைச்சர் நிர்மல்குமாரும் தவெக எம்.எல்.ஏ.க்களும் உடனடியாகக் கைவிட வேண்டும். ஊழலை எதிர்த்து உருவான அதிமுகவுக்கு ஜனநாயக வழியில் மக்களைச் சந்தித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தெரியும். குறுக்கு வழிகளில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய தேவை அக்கட்சிக்கு இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் மக்களின் ஆதரவுடன் செயல்படும் இயக்கமாக அதிமுக தொடர்ந்து விளங்கி வருகிறது. எனவே, ஆதாரமற்ற புகார்களைக் கூறி அரசியல் நாடகம் நடத்துவதைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும். வரம்பு மீறிப் பேசுவதைத் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.