அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (40) வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்த அண்ணன் ராஜபாண்டி (42) தான் இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. ராஜராஜனை ராஜபாண்டி அரிவாளுடன் துரத்திச் சென்று தாக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் முதல் மனைவியின் மகன் ராஜபாண்டிக்கும், இரண்டாவது மனைவியின் மகன் ராஜராஜனுக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜராஜன் தனது வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டிக்கும், ராஜராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ராஜபாண்டி ஆயுதங்களுடன் ராஜராஜனை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ராஜராஜன் வீதியில் அலறியபடி ஓடியுள்ளார். அவரை அரிவாளுடன் ராஜபாண்டி துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.உயிர் தப்புவதற்காக ராஜராஜன் அருகிலிருந்த வீட்டுக்குள் சென்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்த ராஜபாண்டி, அங்கு வைத்து ராஜராஜனை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த கேஸ் சிலிண்டரை தூக்கி அவரது தலையில் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ராஜபாண்டி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜராஜனின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவரது உடலைக் கண்டு கதறி அழுதனர். இதனிடையே, ராஜராஜனை கொலை செய்த ராஜபாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும் வடகாடு-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், ராஜராஜன் கொலை தொடர்பாக அவரது சகோதரர் ராஜபாண்டி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.