தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்திற்காக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவைகளை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டில் பெண்களின் திருமணத்தின்போது அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, 2026-27ஆம் நிதியாண்டில் திட்டத்திற்குத் தேவையான 60,000 தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்வதற்கு நவம்பர் 4ஆம் தேதியான இன்று சமூக நலத்துறை டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் அறிவிப்பின்படி, ஒவ்வொரு தங்க நாணயமும் 8 கிராம் எடையில், 22 கேரட் 916 ஹால்மார்க் தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் செய்யப்படும் பட்டுப் புடவைகளில் சில்க் மார்க் மற்றும் ஹேண்ட்லூம் மார்க் முத்திரைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. டெண்டர் தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், டிசம்பர் மாத இறுதிக்குள் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.