சென்னை அடையாறு மண்டலத்தில் ரூ.9.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 70 படுக்கைகள் கொண்ட நகர்ப்புற சமூக சுகாதார மையத்தை அமைச்சர் குமார் திறந்து வைத்தார். இதனுடன், பள்ளிக் கட்டடம் மற்றும் பல்நோக்குக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1.08 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் அவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், இன்று (நவம்பர் 6) பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைத்தார். 70 படுக்கைகளுடன் நவீன சுகாதார மையம் அடையாறு மண்டலம், 173-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் முதல் அவென்யூ பிரதான சாலையில், மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.9.35 கோடி செலவில் நகர்ப்புற சமூக சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,046 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் 70 படுக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் இதனைத் தொடர்ந்து, 178-வது வார்டுக்கு உட்பட்ட உதயம் நகர் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் கூடுதலாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். மூலதன நிதியின் கீழ் ரூ.76.70 லட்சம் மதிப்பீட்டில், பள்ளியின் முதல் தளத்தில் 331.27 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பார்வையிட்ட அமைச்சர், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். பல்நோக்குக் கட்டடம் திறப்பு மேலும், 175-வது வார்டுக்கு உட்பட்ட டி.என்.எச்.பி. காலனி முதல் பிரதான சாலையில், மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தையும் அமைச்சர் குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மாமன்ற உறுப்பினர் து. சுபாஷினி, மண்டல அலுவலர் என். தட்சிணாமூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.