அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலேயே தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராக இருக்கும் அந்த படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ஏழு கடல் ஏழு மலை இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது. பத்தா விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம்‘பத்தா’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லீயின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படமும் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. அன்பில் அவன் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’, அவரது 23வது திரைப்படமாகும். இதில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. சிக்மா விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்‘சிக்மா’. லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. டோண்ட் டிரபிள் தி டிரபிள் மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டிக்கர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் டாம் குரூஸ் நடித்துள்ள திரைப்படம் ‘டிக்கர்’. இதில் வயதான முதலீட்டாளர் கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். ஆக்ஷன் படங்களுக்கு பிரபலமான டாம் குரூஸ், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஷன் அல்லாத கதைக்களத்தில் நடித்துள்ள படம் இதுவாகும். ரிஸ் அகமது, ஜான் குட்மேன், சாண்ட்ரா ஹுல்லர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. திரிஷ்யம்: தி கன்க்ளூஷன் அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தில் விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். தபு, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் புதியதாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள மூன்றாம் பாகம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. அக்டோபர் முதல் வாரத்திலேயே பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், இதில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது?