அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள்; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள்; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள்; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு

வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடற்பகுதிகளில் ஏற்படக்கூடிய தீவிர வானிலை மாற்றங்கள் தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த மாதம் முதல் டிசம்பர் வரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல்கள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல்களின் வேகம் மற்றும் தீவிரத்தை அளவிடும் ‘ஆற்றல் விரயக்குறியீடு’ அடிப்படையில், அவற்றின் அளவு 13.06 மில்லியன் நாட்ஸ் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 44 ஆண்டுகளின் வரலாற்று சராசரியான 7.15 மில்லியன் நாட்ஸுடன் ஒப்பிடுகையில் இது 83 சதவீதம் அதிகமாகும். இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகளின்படி, ஒடிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். கடுமையான காற்று, தீவிர புயல் அலைகள் மற்றும் 200 முதல் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல்களின் தீவிரம், காற்றில் நிலவும் ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு உருவாகும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ‘ஆற்றல் இழப்பு குறியீடு’ மூலம் கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த வலிமை, இந்த புயல்களின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைத்து கடலோர மாநிலங்களும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களும் மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.