அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள், மருத்துவ கலந்தாய்வுக் குழு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வை நான்கு சுற்றுகளாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நான்கு கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்தபோதும், 948 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாகத் தகவல் வெளியானது. இந்த இடங்களையும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், ஐந்தாவது சிறப்புச் சுற்று கலந்தாய்வை நடத்த மருத்துவ கலந்தாய்வுக் குழு தீர்மானித்தது. அதன்படி நடத்தப்பட்ட சிறப்புச் சுற்று கலந்தாய்வில், காலியாக இருந்த 948 இடங்களில் 537 இடங்கள் மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இருப்பினும், கலந்தாய்வு முடிவடைந்த பிறகும் மீதமுள்ள 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்து கட்ட கலந்தாய்வுகளும் முடிவடைந்தபோது வெறும் 60 முதல் 70 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு அதைவிடப் பல மடங்கு அதிகமாக 411 இடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.