மதுரை, அக்.20: உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு துபையில் வருகிற நவ.12-ஆம் தேதி தொடங்குகிறது என ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பின் தலைவர் ம. ஜெகத் கஸ்பர் ராஜ் தெரிவித்தார். துபாயில் இந்த அமைப்பு சார்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டை முன்னிட்டு, மதுரையில் செவ்வாய்க்கிழமை சாலை வலம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் ம. ஜெகத் கஸ்பர் ராஜ், தென் தமிழக இயக்குநர் பி.மகேந்திரவேல், பரப்புரையாளர் ஜெர்ரி, ‘சிக்ஸ் டாட்ஸ்’ ஆரோக்கிய மேம்பாட்டு மைய நிறுவனர் சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜெகத் கஸ்பர் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகத் தமிழ் தொழில்முனைவோர், திறனாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தி ரைஸ் - எழுமின்’ அமைப்பு சார்பில் துபையில் 17-ஆவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு வருகிற நவ.12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. துபையில் உள்ள மில்லேனியம் பிளாசா தங்கும் விடுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாகுல் ஹமீது தலைமை வகிக்கிறார். இதில் 40 நாடுகளிலிருந்து 700-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறனாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்களின் தொழில், வணிகத் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்குப் பயனளிக்கக் கூடிய நான்கு தொழில் தொடர் புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கென தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநாட்டின் நிறைவில் சுமார் 300 தொழில், வணிக ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருள்களையும், தமிழர்களின் உற்பத்தி, சேவைகளையும் உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்வதே ‘தி ரைஸ் - எழுமின்’ அமைப்பின் முக்கிய நோக்கம். இதை ஆண்டு முழுவதும் செயல்படுத்தும் வகையில், துபையில் சிறப்பு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்களின் தொழில், வணிக வளர்ச்சிக்கான மையமாக இந்த அலுவலகம் செயல்படும். உற்பத்தித் துறை, உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், பின்னலாடை, வீட்டு உபயோகத் துணிகள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த மாநாடு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும். துபை, அபுதாபியை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், திறனாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதுடன், பெங்களூரு, மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். உலகத் தமிழர்களின் தொழில், வணிக உறவுகளை வலுப்படுத்தி, புதிய ஒப்பந்தங்களையும் நீண்டகாலக் கூட்டாண்மைகளையும் உருவாக்குவதே இந்த மாநாட்டின் இலக்கு. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளத்தின் மூலமாகவோ, +91 9150060032, +91 9150060033 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்புகொண்டு பதிவு செய்யலாம் என்றார் அவர். தொடர்ந்து மாலை நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மதுரையில் இரண்டு புதிய சாப்டர்கள் உருவாக்கப்பட்டது. சிக்ஸ்டாட்ஸ் சுந்தரேசன் தலைமையில் முத்தமிழ் என்ற பெயரிலும், ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ் சங்க தலைவர் பிரேம் தலைமையில் சிறகுகள் என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறகுகள் தலைவர் பிரேம் பேசும்போது RISE அமைப்பின் மதுரை சங்கம் 5 மாநாடு சிறப்புற நடைபெற அனைத்து பணிகளையும் முன்னின்று பார்க்க இருப்பதாக தெரிவித்தார்.