846 காலியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வு: ஒரு பணியிடத்திற்கு 469 பேர் போட்டி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

846 காலியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வு: ஒரு பணியிடத்திற்கு 469 பேர் போட்டி

846 காலியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வு: ஒரு பணியிடத்திற்கு 469 பேர் போட்டி

தமிழகம் முழுவதும் 846 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் மூலம் ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 469 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆகஸ்டு மாதம் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 பிரிவில் 43 இடங்களும், தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பிரிவில் 803 இடங்களும் என மொத்தம் 846 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு 4 லட்சத்து 89 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றனர். இதற்கான முதல்நிலைத் தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மாநிலத்தின் 38 மாவட்டங்களில் மொத்தம் 1,647 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதலே தேர்வு எழுத வந்தவர்கள் மையங்களுக்கு முன்பு திரண்டனர். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. சில தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்குப் பிறகு தாமதமாக வந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், சில இடங்களில் தேர்வர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையில் மட்டும் 173 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இங்கு 51,721 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 22,384 ஆண்கள், 29,333 பெண்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் தேர்வு எழுத அனுமதி பெற்ற 4,89,885 பேரில் 3,97,290 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். இது மொத்த விண்ணப்பதாரர்களில் 81.10 சதவீதமாகும். மீதமுள்ள 92,595 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதாவது, 18.9 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 846 பணியிடங்களுக்கு 3.97 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளதால், ஒரு இடத்திற்கு 469 பேர் என்ற அடிப்படையில் போட்டி நிலவுகிறது. இதனால், தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.