தனது வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அன்பில் மகேஷுக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இல்லங்களில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தனது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக அன்பில் மகேஷ் தெரிவித்தார். தனது கோப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், வீட்டின் அனைத்து அறைகளையும் போலீசார் சோதனையிட அனுமதி அளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் மடைமாற்றத்துக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதனிடையே, விசாரணைக்காக வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.